புதன், 7 ஜூலை, 2010

மொக்கையும் அதன் வரலாறும் - ஓர் ஆய்வுக் கட்டுரை

அறிமுகம் :
இன்றைய சூழலில் மொக்கை பற்றி அறியாதவர் இலர். இருப்பினும் மொக்கை எனப்படுவது யாதெனக் கூறவேண்டியது அவசியம். மொக்கை என்பது சமூகத்தில் வாழும் சில விஷமிகளால் மக்களுக்கு இன்னல் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படுவது.மொக்கையை பார்த்தாலோ கேட்டாலோ கண்களிலும் காதுகளிலும் ரத்தம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது கோபத்தை கிளறச்செய்கிறது.கைதேர்ந்த மொக்கயர்களால் உருவாக்கப்படும் மொக்கயானது தற்கொலை எண்ணத்தினை நமக்குள் விதைக்கிறது என்று அமெரிக்க மொக்கை எதிர்ப்பு கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டுள்ளது.மேலும் மொக்கயானது புற்றுநோய் , எய்ட்சு போன்ற உயிர்கொல்லி நோய்களை விடவும் கொடுமையானது என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.இவ்வளவு கொடூரமான மொக்கையை பற்றிய ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. நமது ஆய்வில் கண்டுபிக்கப்பட்ட தகவல்களை இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.


மொக்கையின் தோற்றமும் வளர்ச்சியும் :
மொக்கை எப்பபொழுது தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் தற்பொழுது நமக்கு கிடைக்கவில்லை. அது தமிழ்மொழியுடன் இணைந்தே தோன்றியிருக்கலாம் என ஒரு சிலரும் மொழிகளே இல்லாத காலத்திலேயே மொக்கை தோன்றிவிட்டது என ஒரு சிலரும் வாதிடுகின்றனர். மொக்கையின் வளர்ச்சி பல்வேறு காலங்களில் பல படிகளில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.மேலும் இதிகாச காலங்களிலே மொக்கை பெரும்பங்கு வகித்துள்ளது.
மேலும் கி.மு ஆம் ஆண்டில் மொக்கையனூர் என்ற நாட்டை சார்ந்த மொக்கயரசன் என்பவர் எதிரிகளை பழிவாங்குவதற்காக மொக்கை வளர்ப்பு சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதில் பல்வேறு வகையில் மொக்கை போடுவது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டதாக வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. இவரது இந்த தந்திரத்தை முறியடிக்க பல்வேறு பேரரசுகள் முயன்று தோற்றது மொக்கையின் மீது பெரும் மரியாதையினை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரம்பரையில் வந்தா சிலர் இன்றுவரை மொக்கை போட்டு கொண்டிருப்பது நாம் அறிந்ததே. மேலும் அவர்களது அரசு அதிகப்படியான மொக்கையால் கவிழ்ந்தது அப்போதிருந்த மற்ற நாட்டு அரசர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த அரசு இல்லாதது அவர்களுக்கு பெரும் பலமாக அமைந்ததென இங்கிலாந்தின் அப்போதைய அதிபர் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இந்த அரசு மட்டும் இருந்திருப்பின் ஆங்கிலேயர் இந்தியாவினை பற்றி நினைத்திருக்க முடியாத அளவிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கும் . மேலும் இந்த அரசு நிலைத்திருப்பின் இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கலாம் என விண்வெளி அறிஞர்கள் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்த அரசு மேலும் கொஞ்ச காலம் நிலைத்திருந்தால் இந்திய மக்கள் அனைவரும் வேறு கிரகத்திருக்கு குடி பெயர்ந்திருப்பர். அதனால் பல அறிய விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆகவே மொக்கயரசர் காலத்தில் மொக்கையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.


திரைப்படங்களில் மொக்கை :
இன்றைய திரைப்படங்களில் மொக்கை பெரும்பங்கு வகிக்கிறது. ACTION திரைப்படம் என்று கூறிக்கொண்டு வில்லனின் விமானத்தை கதா நாயகன் மாட்டுவண்டியில் துரத்திப் பிடிப்பதும் , கதாநாயகனை 1000 பேர் சேர்ந்து அடித்தாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பதும் மேலும் துப்பாக்கியால் சுட்ட போதும் கதாநாயகன் உயிர் வாழ்வதும் திரைப்படங்களில் காணப்படும் மொக்கைக்கு எடுத்துக்காட்டுகள். மேலும் தங்களை MASS HERO என்று கூறிக்கொண்டு சிலர் போடும் மொக்கையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த கதாநாயகர்கள் "நான் அடிச்சா தாங்க மாட்ட " என்று பாடுவது "நான் அடிச்சா அடி விழாது இடி விழும் " என்று பஞ்ச் வசனங்கள் பேசுவதும் மக்கள் மத்தில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு கதாநாயகர் "அது" என்று பஞ்ச் வசனம் பேசுவதை குழந்தைகளும் பின்பற்றுவதால் மிட்டைகடைக்காறாக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு மிட்டாய் வாங்கிய பின்னர் குழந்தைகள் "அது" என்று மிரட்டுவது போன்ற பாணியில் கூறியவுடன் மிட்டைகடைக்கரர் மற்றோரோ மிட்டாய் எடுத்துக் கொடுக்கும் அவல நிலை காணப்படுகிறது. இந்த கதாநாயகர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும் தேதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வேறு ஊர்களுக்கு செல்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என பொது நல விரும்பி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற கதாநாயகர்களின் படங்கள் திரையிடப்படும் போது மொத்த தமிழக மக்களும் அண்டை மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிடலாம் என்ற அச்சத்தினால் தமிழ்நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


சின்னத்திரையில் மொக்கை :
திரைப்படங்களைக் காட்டிலும் சின்னத்திரையில் அதிகப்படியான மொக்கை உருவாக்கப்படுகிறது என்பது தொடர் நாடகம் பார்க்கும் பெண்களின் கணவர்களின் கூற்று. மேலும் இது போன்ற மொக்கை தொடர்களை பார்க்கும் பெண்களுக்கு விரைவில் பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஒரு அறிஞர் எச்சரித்துள்ளார். அதிலும் தற்பொழுது சில தொடர்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறினால் பரிசுகள் தரப்போவதாக அறிவிப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தொடரை பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படும் அபய நிலை காணப்படுகிறது.இதனால் இதுபோன்ற மொக்கை தொடர்களை பார்க்க சகிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் சம்பவங்களும் ஆங்கங்கே நடப்பதும் நாம் அறிந்ததே.!


வலைப்பூக்களில் மொக்கை :
வலைப்பூக்களில் பெரும்பாலும் மொக்கை போடப்படுகிறது. புதிய பதிவர் முதல் பழைய பதிவர் வரை அனைவரும் மொக்கை போடுவதில் அதிக கவனம் செலுத்துவது தற்பொழுது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில பதிவர்கள் மொக்கை போடுவதாக தெரியவில்லை.(எ.கா:தேவா ).இருப்பினும் வலைப்பூக்களில் மொக்கை போடுவதற்காகவே சிலர் முயற்சித்து (கோமாளி)வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மொக்கையின் விளைவுகள் :
மொக்கயானது ஒரு தோற்று நோய் போல விரைவில் பரவக்கூடியது. இதனை உருவாக்குபவரே இந்நோய்க்கு ஆளாவது பரிதாபத்திற்கு உரியது.மேலும் ஆண்டுக்கு ஆண்டு மொக்கையல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மொக்கைக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாதது மக்கள் மத்தியில் பேரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.சில மொக்கைகள் சிரிப்பினை உருவாக்குவதால் மொக்கைகளை வேறுபடுத்தி அழிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. விரைவில் இது போன்ற மொக்கைகளுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே நமது அவா..!

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சுறா

விஜய் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. சமீபகாலமாக, பாடல்களும் இந்த குற்றச்சாட்டில் சேர்ந்துவிட்டது. சுறா பாடல்களை பார்ப்போம்.

சுறா பாடல்கள் எல்லாம் தெலுங்கில் மணிஷர்மா போட்டதுதான் என்று ஒரு செய்தி படித்தேன். சரி, தெலுங்குகாரர்கள் கேட்டாச்சு. நமக்கு புதுசா இருந்தா சரி என்று கேட்டால், நாமும் கேட்ட மாதிரி தான் இருக்கிறது.

'நான் நடந்தா அதிரடி' - இது பொதுவா மணிஷர்மா பக்கத்தில் விஷால் உட்கார்ந்தால் அவர் போடும் ட்யூன். மலைக்கோட்டை, தோரணை எல்லாம் கேட்டு, பார்த்து, இதை கேட்டால் மனக்கண்ணில் விஷால் தான் ஆடுகிறார்.

’தஞ்சாவூர் ஜில்லாக்காரி’ பாடல் இசை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று நினைத்தால், ‘போக்கிரி மச்சான்’ என்று அவர்களே எடுத்துக்கொடுக்கிறார்கள். ஆனாலும் நல்லாத்தான் இருக்கு. அதேப்போல், ‘சிறக்கடிக்கும் நிலவு’ம் நல்லாயிருக்கு.

அப்புறம், ஆரம்பப்பாடல் என்று நினைக்கிறேன். ”வங்கக்கடல் எல்லை... நான் சிங்கம் பெத்தப்பிள்ளை...”. ’காதல்னா சும்மா இல்லை’ படத்தில் ரவிகிருஷ்ணா ஒரு கேள்வி கேட்பார். அதைப்பார்த்திருந்தால் கபிலன் இப்படியெல்லாம் எழுதித் தொலைக்க மாட்டார்.

இப்படியெல்லாம் சொன்னாலும், தற்போது என் மதிய தூக்கத்தை கலைக்கும் பாடல்கள் சுறா தான். அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இன்னொரு பாட்டு இருக்கிறது. நீங்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால், இந்த பாடல் வரிகளை கவனியுங்கள். வாலியும் இயக்குனரும் எழுதியிருக்கிறார்கள். (இப்படித்தான் சான்ஸ் வாங்கினாரா?) இது ஒரு டபுள் மீனிங் சாங்.

உங்களுக்காக இதோ,

இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப்பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை.

ஹீரோவை ‘இது’ன்னுட்டாங்க...

ஒளிரும் பனிமலை குமுறும் எரிமலை
இரண்டும் கலந்த இதயம்.
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே காலை உதயம்.

ஒரு மார்க்கமாத்தான் சுத்துறாங்க.

வெற்றிக்கொடி ஏத்து
வீசும் நம்ம காத்து
வருங்காலம் நம்ம கையில் தான்டா...

எங்க? கையை காட்டு. - கவுண்டர்

கட்டுமரம் போல
ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா...

இப்படி காமெடி பண்றதுல, உங்கள மிஞ்ச யாரும் இல்லை!

ஒரு தாய் மக்கள்
ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
நாளை உலகம்
நம்மை பார்த்து கற்கவேண்டும்.

அய்யோ!

ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு.

விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதை.

இதுபோல, இன்னொரு பாட்டு இருக்கு.

தமிழன் வீரத்தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்.

ஆரம்பமே அட்டகாசமா இல்லை.

போதும். இதோட நிறுத்திக்கலாம் என்று வடிவேலு பாணியில் முடித்துக்கொள்கிறேன்.

---

பாட்டுல, படத்துல விஜய்க்கு இப்படி பில்டப் கொடுத்தாலும், பாடல் வெளியீட்டு மேடையில் எல்லோரும் காமெடியாக்கிவிட்டார்கள்.

சக்சேனா சொல்கிறார், “படத்தில் தமன்னா இருந்தால், நாங்கள் வாங்கிவிடுவோம்.” (இதுவும் அவருக்காகத்தானா?.)

வடிவேலு சொல்கிறார், “சாமியாரு படத்தையே சன் பிக்சர்ஸ் ஓட்டிடுவாங்க” (இதை விட்டுடுவாங்களா?)

என்னத்தான்யா நெனைச்சிக்கிட்டீங்க, எங்க ஆள?.

Thanks to www.saravanakumaran.com

தமிழ் சினிமா வின் நெ.1 கதாநாயகன் என்கிற அந்தஸ்து யாரால் நிணயிக்கப்படுகிறது

தமிழ் சினிமா வின் நெ.1 கதாநாயகன் என்கிற அந்தஸ்து யாரால் நிணயிக்கப்படுகிறது என்பதே ஏனைய மொழியிலிருந்து தமிழ் சினிமாவை வித்யாசப்படுகிறது.
1.வசூல் முக்கியம். ஆனால் வசூல் மட்டுமே நெ.1 என்பதை தீர்மானிக்காது.(எம் .ஜி.ஆர்,ரஜினி,கு வசூல் ஆகாத படங்களின் வரலாறு உள்ளது).
2.சிறந்த நடிப்பாற்றல் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
3.உலக சினிமா தரத்துடன் ஒரு துளியும் ஒப்புமை செய்ய யியலாத படங்களைத் தரவேண்டும்.
4.10 வயதுக்குட்பட்ட‌ குழந்தைகளின் ஆதர்ச ஹீரோ வாக இருக்கவேண்டும்.
5.சினிமாவுக்கு வெளியே மேக்கப் போடாதவர்களாக இருக்க வேண்டும்.
6.சம காலத்தில் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் வெளிவந்து திரையுலகத்தை கலக்கினாலும் கொஞசமும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் ஃபார்முலா ப்டங்களையே தர வேண்டும்.
7.க‌டைசியாக..... எந்த‌ப்ப‌ட‌ம் ரிலீஸ் ஆனாலும் தியேட்ட‌ர் அல்லோக‌ல‌ப்ப‌ட‌ வேண்டும்

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

யூத் எனும் தூய தமிழ்த் திரைப்படம்

யூத் எனும் விஜய் நடித்து 2002களில் வெளிவந்த தூய தமிழ்த் திரைப்படம். கதாநாயகனாக வரும் விஜய் ஆங்கில தெரியாத கிராமத்து நபராவார். அமெரிக்காவில் கற்று இந்தியாவரும் இந்திய பெண்ணொருவர் தனது நண்பிகளுடன் உல்லாசவிடுதியொன்றினுள் நுழைந்து மென்பானம் அருந்துவார். அவ்வேளை ஆங்கிருந்த சில இளம் துஷ்டர்கள் அவரது மென்பான கோப்பையை அகற்றிவிட்டு அவ்விடத்தில் மதுசாரம் கலந்து குடிவகை ஒன்றினை மாற்றி வைத்திருப்பர். இதையறியாத பெண்ணும் குடித்துவிட்டு வருகையில், துஷ்டர் அவளோடு சல்லாபமிட முயலுகையில், விஜய் அய்யா சென்று மொங்கு மொங்கு என்று மொங்கி அப்பெண்ணை காத்தருள்கையில், அப்பெண் இவர் கன்னத்தில் முத்தமிட்டுவிடுவார்.
இதனை காதல் என எண்ணும் கிராமத்து அப்பாவி இளைஞர் விஜய் மறுநாளும் அவளை சந்திக்க நாயாய் அலைவார். அவள் எதுவும் தெரியாதவள் போல் நிற்கையில், அவளிடம் தன் மனதை வெளிப்படுத்துவார்.

அப்பொழுது தான் அப்பெண் கடுமையான ஆங்கிலத்தில் அமெரிக்க உச்சரிப்புடன் பதிலிறுப்பார்.
இங்குதான் எனக்கு தலையிடி தொடங்குகின்றது.
இதற்கு பதில் கூறும் விஜய் அவர்கள்: எனக்கு உன்னைப்போல் புஸ்சு புஸ்சு என்று ஆங்கிலம் பேச வராது. சுத்த தமிழில் சொல்கிறேன் கேளு: பிரண்ட்சிப் என்கிறது லைப்பிரரில எடுத்து படிக்கிற புக்கு மாதிரி, காதல் என்பது நாமே எழுதிக்கிற டைரி மாதிரி....... என செமையாக தமிழில் கொடுக்ககையில் தலைவிறைத்துப் போனது!
தமிழ் சினிமாப்படங்களை சிறுவயதில் ஓடியாடி பார்த்திருந்திருப்போம். இன்றும் தமிழக மசாலா படங்களின் மீதான ஈர்ப்பு குறையாமலேயே சீவன் வாழ்ந்துகொண்டிருக்கும். எனினும், வாழ்வின் அனுபவங்கள் சிறக்க, சினிமா காட்டும் யதார்த்தமும், அது போலி என்றுணர்கையில் அதன்மேலேற்படும் கோபமும் தவிர்க்கமுடியாதுள்ளது.

இந்த தளத்தில் இப்படி என் மனசுக்குள்ளேயே போட்டு ஆற்றமுடியாமல் இருப்பதை யாரிடமாவது சொல்லி ஆற்றிக்கொள்ளலாம் என்ற நம்பாசையுடன்....

முறைப்படி திரைப்பட விமர்சனம் குறித்து எதுவும் கற்றறியாதவன், எனினும் அனுபவம் எனும் ஆசான் காட்டும் வழியில் சில என் மனசில் அரிப்பை ஏற்படுத்திய சாத்தியமற்ற சம்பவங்களும், கதையாடல்களும்!!!!!